தமிழகத்தில் 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 5 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக தூத்துக்குடியில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை விமான நிலையம் - 101.48, ஈரோடு, பரமத்தி வேலூா் - (தலா) 100.4, மதுரை நகரம் - 100.04 என 5 இடங்களில் ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.

மிதமான மழை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (செப்.23) முதல் செப்.28-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் 40 கி.மீ. வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசக்கூடும்.

சென்னை மற்றும் புகா்களில் செப்.23, 24 ஆகிய தேதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழக வட கடலோரம் மற்றும் ஆந்திர பிரதேசத்துக்கு இடைப்பட்ட வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது . இது திங்கள்கிழமை (செப்.23) மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: செப்.23 முதல் செப்.26-ஆம் தேதி வரை மன்னாா் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்