மணப்பாடு கடற்கரை சின்ன ரோமாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
மணப்பாடுகடற்கரை
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் இருக்கும் மணப்பாடு என்ற கிராமம் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்டு ஒரு தீபகற்ப மீனவக் கிராமமாக விளங்குகிறது. இந்த ஊரை மணவை என்றும் அழைக்கின்றனர். வரலாற்று சிறப்புடன் சில கத்தோலிக்க சர்ச்கள் இருப்பதால் இதனை சின்ன ரோமாபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
மணலும் காற்றும் நிறைந்த இவ்வூரில், மணல் காற்றில் வீசும் போது ஒரு பாட்டிசைப்பது போல் உள்ளதால் இதற்கு மணப்பாடு என்று பெயர் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முன்னொரு காலத்தில், இலங்கையிலும், பர்மாவிலும் தொழில் புரிந்த இவ்வூரைச் சேர்ந்த வணிகர்களினால் பெரும் செல்வம் ஈட்டியிருந்தது. மேலும், இங்கு இருபதாம் நூற்றாண்டின் நடுவில் நிறுவப்பட்ட கல்விக் கூடங்கள் உள்ளூரில் பலரும், வெளியூர்களிலிருந்து மேலும் பலரும் கல்வி பெறக் காரணமாக விளங்கின. கவிதையும், இசையும், நடிப்பும், ஓவியமும், சிற்பக் கலைகளும் இவ்வூரில் வளர்ந்தன
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் சுற்றுலா தலமாக விளங்கினாலும் இங்குள்ள மக்கள் மீன் பிடிப்பு தொழிலையே பிரதானமாக செய்கின்ளனர்.அத்தோடு பனை பொருட்களையும் விற்பனை செய்கின்றன.இந்த ஊரில் பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்கப்படுகின்றன. மணப்பாடு கருவாடுக்கும் சிறப்பு வாய்ந்தது, இந்த ஊரில் உள்ள தெருக்களில் விதமாக கருவாடுகள் உலர்த்தப் படுவதையும் விற்கப்படுவதையும் காணலாம்.
தீபகற்ப குன்றின் மீதுள்ள திருச்சிலுவை ஆலயம் 400 ஆண்டுகளுக்கு மேலானது என்றும், நடுக்கடலில் கப்பல் சிதைந்தபின் கரைக்குத் தப்பி வந்த போர்த்துக்கீசிய மாலுமிகள் உருவாக்கியது என்றும் நம்பப்படுகிறது. இவ்வாலயத்தில் கிறிஸ்து இறந்த சிலுவை மரத்தின் சிறு துண்டு என்று நம்பப்படும் பொருள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலைக் கட்டட முறையில், பிரமாண்டமாகவும், அழகாகவும் கட்டப்பட்டுள்ள இரண்டு தேவாலயங்கள், புனித ஜேம்ஸ் தேவாலயம், மற்றும் தூய ஆவியானவர் ஆலயம். இவ்விரண்டும் ஒன்றை, ஒன்று நோக்கும் வண்ணம் ஒரே தெருவின் இரு புறங்களிலும் உள்ளன. மற்றும் பல சிறு தேவாலயங்களும் இவ்வூரில் உண்டு.
இந்த ஊரிலே, புனித சவேரியார் வந்து தங்கி இங்குள்ள மக்களை கத்தோலிக்கர்களாக மாற்றியதாக வரலாறு சொல்லப்படுகிறது. தீபகற்பத்தின் முனையில் இருக்கும் குகையில் அவர் தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. பரதவ மக்களுக்கு போர்த்துக்கீசிய குடும்ப பெயர்களான பர்னாந்து, மிராந்த, வாஸ், டிசில்வா, டிகோஸ்தா, டிரோஸ் போன்ற பெயர்களையும் அவரே வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது.


கருத்துகள்
கருத்துரையிடுக